இந்த அவதார் அம்சங்களை நீங்கள் தேர்வுசெய்தால் மட்டுமே இந்த WhatsApp அவதார்களின் அம்சங்கள் குறித்த தனியுரிமை அறிக்கை பொருந்தும். பரிந்துரைக்கப்படும் அவதார்களை உருவாக்குவதற்கும் அவதார் அழைப்பை ஆதரிப்பதற்கும் உங்கள் தகவல்களை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் மற்றும் பாதுகாக்கிறோம் என்பதை இது விளக்குகிறது, மேலும் இது WhatsApp தனியுரிமைக் கொள்கைக்கு துணையாக உள்ளது.
பரிந்துரைக்கப்படும் அவதார்கள்
உங்கள் அவதாரை உருவாக்கும்போது நீங்கள் படமெடுத்து, சமர்ப்பிக்கும் உங்களின் படத்தைப் பயன்படுத்தி விரைவாக அவதார்களைப் பரிந்துரைப்பதற்கு WhatsApp, LLC ஐ ‘பரிந்துரைக்கப்படும் அவதார்கள்’ அம்சம் அனுமதிக்கிறது. பரிந்துரைக்கப்படும் அவதார்கள் அம்சத்தைப் பயன்படுத்த நீங்கள் தேர்வுசெய்தால், இந்தத் தனியுரிமை அறிக்கையை நீங்கள் ஏற்க வேண்டும்.
பரிந்துரைக்கப்படும் அவதார் அம்சத்தை வழங்கப் பயன்படுத்தப்படும் தகவல்கள்
உங்கள் தோற்றத்தை முன் மாதிரியாகக் கொண்ட அவதார்களை WhatsApp பரிந்துரைப்பதற்கு, உங்கள் கண்கள், மூக்கு, வாய் போன்ற உங்கள் முகத்தின் பாகங்களின் அமைவிடத்தைக் கணக்கிட்டு, உங்கள் முகத்தின் அந்தப் பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட நெளிவு சுழிவுகளை உங்கள் படத்தின் மூலம் ("கணக்கிடப்பட்ட முகப் புள்ளிகள்") நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம். உங்கள் முகத்தின் சில பகுதிகளின் தோராயமான அளவு, வடிவம் மற்றும் வண்ண நிறமியைக் ("கணிக்கப்பட்ட முகக் கூறுகள்") கண்டறிவதற்கும் உங்கள் படத்தை நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம். உங்களுக்குப் பிடித்த அவதார்களை உருவாக்க எங்கள் தொழில்நுட்பம் உங்களின் கணக்கிடப்பட்ட முகப் புள்ளிகள் மற்றும் கணிக்கப்பட்ட முகக் கூறுகளைப் பயன்படுத்துகிறது, அதை WhatsApp உங்களுக்குப் பரிந்துரைக்கிறது. பரிந்துரைக்கப்படும் அவதார் அம்சத்தை நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் இறுதி அவதாரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக பரிந்துரைக்கப்படும் அவதார்களைத் தனிப்பயனாக்குவதற்கு அவதார் எடிட்டர் கருவியை நீங்கள் பயன்படுத்தலாம். உங்களை அடையாளம் காண்பதற்கு இந்தத் தகவல்கள் எதுவும் பயன்படுத்தப்படாது. இவை உங்களை அடிப்படையாகக் கொண்ட அவதார்களைப் பரிந்துரைக்கும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.
உங்கள் இறுதி அவதாரைத் தேர்ந்தெடுத்ததும், உங்கள் படம், கணக்கிடப்பட்ட முகப் புள்ளிகள், கணிக்கப்பட்ட முகக் கூறுகள் மற்றும் பரிந்துரைக்கப்படும் அவதார்களை நீக்கும் செயல்முறை விரைவில் தொடங்கப்படும். முழு நீக்குதல் செயல்முறையும் நிறைவடைய 14 நாட்கள் வரை எடுக்கக்கூடும்.
WhatsApp இன் தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டு, உங்களின் இறுதி அவதார் WhatsApp மூலமும் உங்கள் சாதனத்திலும் சேமிக்கப்படும், இதன் மூலம் WhatsApp இல் ஊடாடும் டிஜிட்டல் அனுபவங்களுக்கு அதைப் பயன்படுத்தலாம். உங்கள் இறுதி அவதார் உருவாக்கப்பட்டவுடன், உங்கள் WhatsApp அவதார் அமைப்புகளில் உள்ள “அவதாரை நீக்குக” என்பதைக் கிளிக் செய்து, எந்த நேரத்திலும் அதை நீங்கள் நீக்கலாம். உங்கள் WhatsApp கணக்கை நீக்கினால் உங்கள் இறுதி அவதாரும் தானியங்கி முறையில் நீக்கப்பட்டுவிடும்.
அவதார் அழைப்பு
அவதார் அழைப்பு அம்சமானது உங்கள் தனிப்பட்ட அவதாராக WhatsApp வீடியோ அழைப்புகளில் பங்கேற்க உதவுகிறது. அவதார் அழைப்பு அம்சம் என்பது மேம்படுத்தப்பட்ட எதார்த்த அம்சமாகும், இது உங்கள் வீடியோவை உங்கள் நேரடி அவதாரைக் கொண்டு மாற்றும்.
அவதார் அழைப்பு அம்சத்தை வழங்கப் பயன்படுத்தப்படும் தகவல்கள்
அவதார் அழைப்பு அம்சத்தைப் பயன்படுத்த நீங்கள் தேர்வுசெய்தால், வீடியோவில் நீங்கள் இருக்கப்போகும் இடத்தில் உங்கள் அவதார் தோன்றுவதையும், அது உங்கள் முகபாவனைகளையும் அசைவுகளையும் நிகழ்நேரத்தில் (கேமரா எஃபெக்ட்டுகள்) காட்டுவதையும் நாங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
அவதார் அழைப்பை எளிதாக்கிட, உங்கள் முகத்தில் அமைந்துள்ள பாகங்களையும் (உங்கள் கண்கள், மூக்கு, வாய் போன்ற பாகங்களையும்) உங்கள் முகத்தில் உள்ள அந்தப் பாகங்களின் வடிவ அமைப்புகளில் உள்ள குறிப்பிட்ட புள்ளிகளையும் ("கணக்கிடப்பட்ட முகப் புள்ளிகள்") WhatsApp கணிக்கும். இந்தக் கணக்கிடப்பட்ட முகப் புள்ளிகளை முகத்தின் பொதுவான மாதிரியில் பயன்படுத்தி, உங்கள் முகபாவனைகள் மற்றும் அசைவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அதைச் சரிசெய்வோம்.
உங்களை அடையாளம் காண இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படாது. உங்கள் வீடியோ அழைப்புகளின்போது அவதார் அழைப்பு அம்சத்தை வழங்க மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தினாலோ, வீடியோ அழைப்பு முடிவடைந்தாலோ, இந்தத் தகவல்களைச் செயலாக்குவதை நிறுத்திவிடுவோம். நாங்கள் இந்தத் தகவல்களைச் சேமிப்பதோ மூன்றாம் தரப்பினருடன் பகிர்வதோ இல்லை.
WhatsApp இன் தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டு, உங்கள் அவதார் WhatsApp மூலமும் உங்கள் சாதனத்திலும் சேமிக்கப்படும், இதன் மூலம் அது அவதார் அழைப்பிற்குப் பயன்படுத்தப்படும். உங்கள் WhatsApp அவதார் அமைப்புகளில் உள்ள “அவதாரை நீக்குக” என்பதைக் கிளிக் செய்து, எந்த நேரத்திலும் அதை நீங்கள் நீக்கலாம். உங்கள் WhatsApp கணக்கை நீக்கினால் உங்கள் அவதாரும் தானியங்கி முறையில் நீக்கப்பட்டுவிடும்.
அமெரிக்க குடியிருப்பாளர்களுக்கான கூடுதல் தகவல்கள்
அவதார் அழைப்பு அம்சமானது கேமரா எஃபெக்ட்டுகள் அமைப்பு மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்க, அவதார் அழைப்பை இயக்குவதற்கு, இந்தத் தனியுரிமை அறிக்கையை நீங்கள் ஏற்க வேண்டும், இது கேமரா எஃபெக்ட்டுகள் அமைப்பை இயக்கும். நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் WhatsApp தனியுரிமை அமைப்புகளில் கேமரா எஃபெக்ட்டுகள் அமைப்பை முடக்கலாம். அமைப்பு முடக்கப்பட்டிருந்தால், அவதார் அழைப்பு கிடைக்கப்பெறாது, இருப்பினும் நீங்கள் அனைத்து பிற WhatsApp அம்சங்களுக்கான அணுகலை இன்னும் கொண்டிருப்பீர்கள்.
நீங்கள் அவதார் அழைப்பைப் பயன்படுத்தும்போது, உங்கள் வீடியோ அழைப்பில் தோன்றும் பிற நபர்களின் படங்களிலிருந்து தகவல்களைச் செயலாக்கக்கூடும். அவதார் அழைப்பு மற்றும் கேமரா எஃபெக்ட்டுகள் அமைப்பை இயக்குவதன் மூலம், உங்கள் வீடியோவில் தோன்றும் அனைவரின் WhatsApp கணக்குகளிலும் கேமரா எஃபெக்ட்டுகள் அமைப்பை இயக்கியிருந்தால் மட்டுமே நீங்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்துவீர்கள் அல்லது நீங்கள் அவர்களின் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்து, அவர்கள் சார்பாக இந்த அறிவிப்பின் விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே நீங்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்துவீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.